எச்.ஏ.டி.பி மைதானத்தில் தற்போது நான்கு உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தம் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் எச்.ஏ.டி.பி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பயிற்சி தளம் அமைந்துள்ளது. இந்நிலையில் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று மைதானத்தை மேம்படுத்துவதன் ஒருபகுதியாக உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மைதானத்தை சுற்றியுள்ள நான்கு இடங்களில் உயர் மின் விளக்குகள் பொருத்த படுவதற்காக குழி தோண்டப்பட்டு பில்லர்கள் போடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 38 மீட்டர் உயரம் கொண்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்வாறு மின் விளக்குகள் பொருத்தபடுவதால் இரவு நேரங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்த வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து நீலகிரி விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ஜெயச்சந்திரன் கூறும்போது, எப்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் தற்போது நான்கு புறங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த மின் விளக்குகள் சரியாக இயக்கப்படுகிறது என சோதனை நடத்திய பிறகு இரண்டு ஜெனரேட்டர்கள் மூலம் இந்த நான்கு உயர்மின் கோபுர விளக்குகளை இயக்க முடியும் எனவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.