சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விக்னேஷ் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, சமீப காலமாகவே இரு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.
கடந்த 5 வருடங்களில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது, உரிய அனுமதி பெறாமல் இரு சக்கர வாகனத்தின் வடிவங்களை மாற்றி அமைத்து ஓட்டியது, சைலன்ஸர்களை மாற்றியது போன்ற வழக்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதன் பிறகு வாகனங்களை வேகமாக ஓட்டுவது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முறையாக அனுமதி பெறாமல் வாகனத்தை மாற்றி அமைப்பது விபத்துக்கு வழிவகுக்கும்.
எனவே இருசக்கர வாகனங்களை மாற்றி அமைப்பதை தடுக்கும் விதமாகவும், வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசு 4 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.