இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.1972 முதல் தற்போது வரை நடந்துள்ள 11 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு முறையுமே ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற்று வருகிறது.
காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி மூன்றாவது கட்சியாக களமிறங்கியுள்ளது. மூன்று கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில் சிவோட்டர் ஏபிபி கருத்துக்கணிப்பின் முடிவுகளின் படி இந்த முறை இமாச்சல பிரதேசத்தில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியான கருத்துக்கணிப்பில் பாஜகவானது 31 முதல் 39 இடங்களையும், காங்கிரஸ் 29 முதல் 37 இடங்களையும், ஆம் ஆத்மிக்கு ஒரு இடமும் கிடைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் பெரும்பான்மைக்கான இடங்களுக்கு மிக அருகில் செல்லலாம் அல்லது பெரும்பான்மை பெற முடியாமல் தொங்கு சட்டசபை எதிர்கொள்ளவும் நேரிடலாம் என்று இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது