பாகிஸ்தானில் இவாக்யூ அறக்கட்டளை தனது கட்டுப்பாட்டில் உள்ள சிறுபான்மையினர் இந்து ஆலயங்கள் குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை கடந்த டிசம்பர் மாதம் ஜாமியத் உலமா-இ- இஸ்லாம் கட்சியை சேர்ந்த ஃபசல் உர் ரஹ்மான் குழு உறுப்பினர்கள் எரித்துவிட்டனர். இதற்கு சிறுபான்மை இந்து சமூக தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஜனவரி 5 ஆம் தேதி இவாக்யூ அறக்கட்டளை சொத்து வாரியத்தின் எல்லைக்குட்பட்ட அனைத்து கோவில்கள் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த அறக்கட்டளை சமர்ப்பித்த அறிக்கையில் பாகிஸ்தானில் அமைந்துள்ள 365 கோவில்களில், 13 கோவில்கள் மட்டுமே இந்து அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், 65 ஆலயங்கள் இந்து சமூகத்தின் பொறுப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள 287 இந்து கோவில்கள் நில மாபியாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையான இந்து மக்கள் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் குடியேறிவிட்டனர். அந்தப் பகுதியில் இந்துக்கள், முஸ்லீம் குடியிருப்பாளர்களுடன் தங்களுடைய மரபுகள், மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள் தீவிரவாதிகளால் மிகவும் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.