விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ராஷ்டிரிய ஸ்வயசேவக் சங் அமைப்பின் தலைவர் திரு. மோகன் பகவத் அவர்கள், ஜாதி, வர்ணம் என்பவை எல்லாம் இறந்த கால விவகாரங்கள் என்றும், அவற்றை மறந்து விட்டு கடந்து செல்வோம் என்றும் கூறியுள்ளார். அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறு எதுவும் இல்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.
இந்திய சமூகம் அல்லது இந்து சமூகம் ஜாதி மற்றும் வர்ணம் ஆகிய இரண்டையும் தவிர்த்து இயங்கவே முடியாது. இந்த சமூகத்தின் அடி முதல் நுனி வரையில் விரவி பரவி அதன் உயிர் இயக்கமாகவே விளங்குகின்றது. ஆனால் நடைமுறை வாழ்வில் ஒரு வலுவான இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்கால பேருண்மையை கடந்த கால விவகாரங்கள் எனவும் அவற்றை மறக்கும்படியும் திரு. மோகன் பகவத் அவர்கள் கூறுகிறார்கள்.
முழு பூசணிக்காயை சோற்றில் மூடி மறைக்கும் உலக மகா கில்லாடியாக இருக்கிறார். நம்மைப் போன்றவர்கள் ஏதோ இல்லாத ஒன்றை இட்டு கட்டி பேசுவதை போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைகிறார். வர்ணாசிரமம் இச்சமூகத்தின் ஆணிவேராகவும், ஜாதிகள் அதன் பக்க வேர்களாகவும், குலம்-கோத்திரம் போன்றவை அவற்றின் சல்லி வேர்களாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் திரு. மோகன் அவர்கள் கூறுவது போன்று ஜாதியும் வர்ணமும் மறந்து விடக் கூடியவை அல்ல. வேரோடு கிள்ளி எறிந்து முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட வேண்டியவை. எனவே இதனை உணர்ந்து ஒப்புக்கொண்டு ஜாதியை வர்ணத்தை சிதைப்பதற்கு, எச்ச கொச்சமும் இல்லாத அளவுக்கு துடைத்தெறிவதற்கும் போராடுவதற்கு முன் வாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
சாதியும் வர்ணமும்
மறந்துவிடக் கூடியவை அல்ல; அழித்தொழிக்கப்பட வேண்டியவை!ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூற்றுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் கருத்து!#Annihilation_of_Caste_and_Varna#Thiruma#VCK pic.twitter.com/mJfgu1iNjR
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 8, 2022