தென்னாப்பிரிக்காவில், ஒரு நீர் யானை, இரண்டு பெண்களை மரண வாயிலுக்கு அழைத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிருகக்காட்சி சாலைகளில் செல்லும் மனிதர்கள், நீர்யானை, ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகள் சாதுவாக நடந்து கொள்ளும் என்று நினைக்கின்றனர். ஆனால், எந்த விலங்கு எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்பது யாருக்கும் தெரியாது. அதனை விளக்கும் சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்திருக்கிறது.
தென்ஆப்பிரிக்காவில் வசிக்கும் 39 வயதான Natasha Vrany என்ற பெண் தன் உறவினரான Belinda Newman என்ற 62 வயது பெண்ணுடன் நீர்யானை காட்சியகத்திற்கு சென்றிருக்கிறார். அந்த காப்பகத்தில் நீர் யானைகளுக்கு, உணவு கொடுப்பதற்கும், தொடுவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
எனவே, Natasha அங்கிருந்த ஒரு நீர்யானையை தொட்டுள்ளார். அப்போது, திடீரென்று அந்த நீர்யானை அவர் மீது பாய்ந்து, அவரின் கால்களை கவ்விக்கொண்டது. இதனைப் பார்த்த, Belinda, அவரை காப்பாற்ற முயன்றிருக்கிறார். இதனால், Natasha-வை விட்ட நீர்யானை, Belinda மீது பாய்ந்து, மோதித்தள்ளியதோடு, அவரின் வயிற்றைக் கிழித்தது.
அந்த சமயத்தில் காப்பகத்தின் உரிமையாளர் ஓடி வந்து அவர்களை மீட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த, Natasha, கண்விழித்தபோது Belinda-ன் வயிறு கிழிக்கப்பட்டு, குடலை தன் கையில் ஏந்தி கொண்டு அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ந்து போனார். அதன்பின்பு இருவரையும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, Natasha கூறுகையில், மரண வாயிலுக்குச் சென்று திரும்பியதாக உணர்கிறேன். தெரியாமல் கூட விலங்குகள் காப்பகம் பக்கமே சென்று விட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். வாழ்நாள் முழுவதும் இந்த கோர அனுபவம், என் மனதில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.