Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரி மீது அவரது மனைவி மீண்டும் போலீஸ் புகார்.!

தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்திவருவதாக ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூவர் சாலையைச் சேர்ந்தவர் அருணா. இவர் யுபிஎஸ்சி தேர்வெழுத பயிற்சி மையத்தில் பயின்றபோது, ஆனந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். 2016ஆம் ஆண்டு ஆனந்த் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று தற்போது ஹைதராபாத்தில் உள்ளார்.

ஆனந்த், அருணாவிற்கு 2017ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்காக பெண் வீட்டார் தரப்பில் சுமார் 500 சவரன் நகை, சுமார் 4 கோடி ரூபாய் வரதட்சணை கொடுக்கபட்டதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அருணாவை, ஆனந்தும் அவரது தாய் மலர்கொடியும் சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, வன்கொடுமை செய்து வந்ததாகவும், மேலும், தேனாம்பேட்டை – திருவள்ளுவர் சாலையில் அருணாவின் தந்தை நடத்திவரும் உணவகம் உள்ளிட்ட சொத்தையும் அபகரிக்க ஆனந்த் முயற்சி செய்ததாகவும் அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர் உயர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதனையடுத்து காவல் துறையினர் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்திற்கு ஆதரவாக செயல்படுவதாக மீண்டும் அவரது மனைவி அருணா காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது தொடர்பாக உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாகவும், இறுதியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் கூறினார்.

Categories

Tech |