பிரான்ஸில் பதினாறாம் லூயி மன்னருக்கு எதிராக பிரெஞ்சு புரட்சி வெடித்தபோது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவம் கேட்டு 1789 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அன்று பெண்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கினர். ஆனால் பதினாறாம் லூயி அந்த கோரிக்கையை ஏற்க மறுத்தார். அத்துடன் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அறிவித்தார். இதனால் வீறுகொண்டு எழுந்த ஆயிரக்கணக்கான பெண்கள், அரண்மனை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அரண்மனை முற்றுகையின் பொழுது அரசனின் மேல் காப்பாளர்கள் இருவர் அடித்து கொலை செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மன்னன் பதினாறாம் லூயி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக அறிவித்தார்.
பிரான்சில் எழுந்த பெண்களின் குரலானது ஜெர்மனி, ஆஸ்திரேலியா, டென்மார்க், இத்தாலி என ஐரோப்பிய நாடுகள் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியது. எனினும் பெண்களின் கோரிக்கைகள் எதுவும் உடனடியாக நிறைவேறவில்லை. பின்னர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பெண்களை அரசவை ஆலோசனைக் குழுவில் சேர்க்கவும் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் 1848ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி அன்று பிரான்ஸ் மன்னர் லூயி பிளான்க் ஒப்புதல் அளித்தார். அந்த நாளே இன்று வரையிலான சர்வதேச மகளிர் தினத்துக்கான விதையாக அமைந்தது.