ஜெர்மன் நாட்டின் நாஜி தலைவரான சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய கைக்கடிகாரம் 1.1 மில்லியனுக்கு அமெரிக்காவில் விற்பனையானதற்கு யூத தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெர்மன் நாட்டை இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வழி நடத்தி, 11 மில்லியன் மக்களை கொன்று குவித்தவர் தான் மிகக் கொடூர சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர். உலக தலைவர்களின் பட்டியலில் மிக முக்கியமான இடம் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் மேரிலாந்தில் இருக்கும் அலெக்ஸாண்டர் வரலாற்று ஏலத்தில் ஹிட்லர் பயன்படுத்திய பழமையான கடிகாரம் 1.1 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
அந்த ஹூபர் டைம் பீஸ்ஸில் ஸ்வஸ்திகா சின்னம் இடம்பெற்றிருக்கிறது. அடால்ப் ஹிட்லரை குறிக்கும் வகையில் AH என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் யூத தலைவர்கள் 34 பேர் ஏல நிறுவனத்திற்கு வெளிப்படை கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அதில் ஹிட்லரின் கைகடிகாரம் ஏலத்தில் விற்கப்பட்டது வெறுக்கத்தக்கது. உடனே, ஏலத்திலிருந்து அதனை நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.