Categories
கிரிக்கெட் விளையாட்டு

22 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதிய ஹிட்மேன்…..!!

ஒரே ஆண்டில் அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, நடப்பு ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான ஃபார்மெட்டுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

Rohit Sharma

இந்நிலையில், 316 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 63 பந்துகளில் எட்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம், ஒரே ஆண்டில் மூன்று விதமான போட்டிகளையும் சேர்த்து அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டு கால சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். அவர் இப்போட்டியில் ஒன்பது ரன்கள் எடுத்தபோது இச்சாதனையை எட்டினார்.

1997இல் ஜெயசூர்யா 44 இன்னிங்ஸில் 2387 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் ரோஹித் சர்மா 47 இன்னிங்ஸில் 2442 ரன்களை குவித்தார். இந்தத் தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதம் என 258 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அவர் ஐந்து சதம் அடித்து அசாத்திய சாதனைப் படைத்திருந்தார்.

ஒரே ஆண்டில் அதிக ரன்களை எடுத்த தொடக்க வீரர்கள்

ரோஹித் சர்மா (இந்தியா) – 2442 ரன்கள், 47 இன்னிங்ஸ், 2019

சனத் ஜெயசூர்யா (இலங்கை) – 2387 ரன்கள், 44 இன்னிங்ஸ், 1997

சேவாக் (இந்தியா) – 2355 ரன்கள், 46 இன்னிங்ஸ், 2008

மேத்யூவ் ஹேடன் (ஆஸ்திரேலியா) – 2349 ரன்கள், 52 இன்னிங்ஸ், 2003

Categories

Tech |