மதுரையில் மீண்டும் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ் தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்ததால் அப்பகுதியில் பதற்றம் உண்டானது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி ஒருவர் கடந்த 17ம் தேதி உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாகவும், மஞ்சள் காமாலை இருப்பதாகவும் கூறி உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.ரத்தம் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் அரிப்பு ஏற்பட்டு முகம் கை கால்கள் வீங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்ட பின் எச்ஐவி தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் ரத்தம் ஏற்றும் போது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றும், ஆனால் பயம் காரணமாக சிலர் வதந்திகளைப் பரப்புவதாகவும் தெரிவித்திருந்தது.