தங்கள் விளையாட்டிற்கு பேராதரவு அளித்த ஒடிசா மக்களுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது
இந்தியாவில் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் இருக்கும் கலிங்கா மைதானத்தில் வைத்து சர்வதேச ஹாக்கி போட்டிகள் அனைத்தும் நடைபெறுவது வழக்கம். போட்டிகளில் இந்திய அணி விளையாடும் பொழுது ஒடிசா மக்களிடமிருந்து அதிக அளவில் ஆதரவு கிடைக்கும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து 42 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதி உதவியை ஒடிசா மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய ஹாக்கி இந்தியா தலைவர் முகமது முஷ்டாக் அகமது கூறுகையில் “ஹாக்கி விளையாட்டிற்கு புவனேஸ்வரில் இருக்கும் ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும். ஆனால் கொரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு நாங்கள் 21 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது அவர்களுக்கு உதவும்” என்றார்
இதேபோன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய பிரதமரின் நிவாரண நிதிக்கு ஹாக்கி இந்தியா ரூபாய் ஒரு கோடி நிதி உதவி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.