இந்தியா – அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினா அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணியை வீழ்த்தியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் காரணமாக இந்திய மகளிர் ஹாக்கி அணி சர்வதேச சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய அணி அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணியுடன் மோதியது . இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆரம்பத்திலிருந்தே அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வந்தது. இந்த அணியை சேர்ந்த சோல் பாகெல்லா ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய அணியை சேர்ந்த சலீமா டெட் ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதற்குப் பிறகு நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் கோர்செலானி ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் கோல் அடித்து அர்ஜெண்டினா அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதனால் போட்டியின் இறுதியில் அர்ஜெண்டினா ஜூனியர்ஸ் அணி 2 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் 2 – 2, 1 – 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.