புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மூன்று வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் பயிலும் அங்கன்வாடிக்கு முறையான விடுமுறை விடவில்லை என்று பெற்றோர்களும் , சமூக ஆர்வலர்களும் ஆதங்கத்தை தெரிவித்தநிலையில் புதுக்கோட்டை அங்கன்வாடிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக திருவாரூரில் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்தன் உத்தரவு பிறப்பித்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் விடுமுறை விடப்பட்டுள்ளது.