வங்கதேச தலைநகர் டாக்காவில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உள்ளது. இந்த பேக்கரிக்குள் கடந்த 2016ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்தனர். 12 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அதற்கு முன்னர் பயங்கரவாதிகள் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த 22 பேரை கொடூரமாக கொன்றனர். அதில் 19 வயதான இந்திய மாணவி தரிஷி ஜெய்ன் உள்பட 9 இத்தாலியர்கள், 7 ஜப்பானியர்கள் அடங்கும்.
இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டது. குரானிலுள்ள வசனத்தை சொல்லியவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், சொல்ல தெரியாதோர் கொல்லப்பட்டதாகவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொலையாளிகள் கொல்லப்பட்ட போதிலும், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட 8 பேரை காவலர்கள் பின்னர் கைது செய்தனர். அவர்கள் மீதான விசாரணை, பயங்கரவாத தடுப்பு தீர்ப்பாய நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை, கடந்த மாதம் (அக்டோபர்) 27ஆம் தேதியோடு நிறைவடைந்தது. மொத்தம் 113 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முகம்மது முஜூபுர் ரகுமான் வருகிற 27ஆம் தேதி அறிவிக்கிறார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இந்திய மாணவி அமெரிக்காவில் பயின்று வந்தார். விடுமுறையை கொண்டாட வங்கதேசத்தின் டாக்கா நகருக்கு சென்றிருந்தார். கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்தில் இந்து, சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.