ஹாலிவுட் நடிகையும், மாடலுமான பமீலா ஆண்டர்சன் – தயாரிப்பாளர் ஜோன் பீட்டர்ஸ் ஆகியோர் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். 35 ஆண்டு காலம் டேட்டிங்கில் ஈடுபட்டுவந்த பமீலா ஆண்டர்சன் – ஜோன் பீட்டர்ஸ் ஜோடி கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள மாலிபு நகரில் ஜனவரி 20ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் தங்களது காதல் வாழ்க்கையிலிருந்து திருமண உறவுக்கு மிகவும் எளிமையான முறையில் அடியெடுத்துவைத்தனர்.
பமீலாவுடனான உறவு குறித்து பீட்டர்ஸ் கூறியதாவது:
ஒரு நடிகையாக தனது முழு திறமையையும் பமீலா இன்னும் வெளிப்படுத்தாமல் இருப்பதால், தனக்கு கிடைக்கவேண்டிய புகழும், வெளிச்சமும் இல்லாமல் இருக்கிறார். அவரிடம் பல திறமைகள் இருக்கின்றன. அவரது கண்களைப் பார்த்து சொக்கிப்போய்தான் காதலில் விழுந்தேன்.
எங்கும் அழகான பெண்கள் இருக்கிறார்கள். என்னை நல்ல வழியில் செயல்படுத்தியதற்கு காரணமாகத் திகழும் பமீலாவோடு 35 வருடங்களாக காதலில் இருந்துள்ளேன். பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்திய அவரை நான் மிகவும் பாதுகாப்போடும், அவருக்குக் கிடைக்க வேண்டிய தகுதியோடும் நடத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேபோல் பமீலா ஆண்டர்சன் தனது காதல் வாழ்க்கை குறித்து கூறுகையில், “ஹாலிவுட்டின் கெட்ட பையன் ஜோன் பீட்டர்ஸை யாரோடும் ஒப்பிட முடியாது. நாங்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துவைத்திருப்பதுடன், பரஸ்பர மரியாதையும் அளித்துவருகிறோம். எந்த நிபந்தனையுமின்றி காதலிக்கிறோம். நான் நற்பேறு பெற்ற பெண். கடவுள் திட்டமிட்டு எங்களை இணைத்துள்ளார்” என்றார்.
இதுவரை நான்கு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இருவரும் தற்போது ஐந்தாவது முறையாக திருமணம் செய்துள்ளனர். 52 வயதாகும் பமீலாவும், 74 வயதாகும் பீட்டர்ஸும், 35 வருட டேட்டிங் உறவை திருமணம் என்ற அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருப்பதற்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.