மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிதியுதவியில் வீட்டிலேயே கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள உதவும் கருவியை கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு நாடு முழுவதும் மத்திய அரசும், சுகாதாரத் துறையில் தீவிரமாக பாடுபட்டு வருகின்றனர். முன்பை காட்டிலும் தற்போது பரிசோதனையும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரிசோதனை என்பது ஆர் டி பி சி ஆர் என்ற முறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பரிசோதனையின் மூலம் கொரோனா மரபணு கண்டறியப்பட்டு நோயாளிகள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். இந்த சோதனைகளை லேபில் மட்டுமே வைத்து நடத்த முடியும். அதேபோல் இதற்கான முடிவுகள் வெளியாக சில மணிநேரம் ஆகும். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலைக்கு கொரோனா அதிகம் பரவி வரும் இக்காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவும், விரைந்து முடிவுகளை பெறவும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களும் , புனே தேசிய ரசாயன ஆய்வுக்கூடமும் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் கண்டுபிடிக்க உள்ள இந்த கருவி மூலம் பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த ஆராய்ச்சிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் நிதி அளித்து உதவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தேதி முதல் இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த கருவியை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளதாகவும் நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.