வீட்டில் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்த ஊர்க்காவல் படை வீரரை போலீஸ் கமிஷனர் பணி நீக்கம் செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால் வரும் 14ஆம் தேதி வரை தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் சலூன், தேனீர் மற்றும் டாஸ்மார்க் கடைகள் போன்றவற்றை அரசு திறப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமத்தில் வீராணம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து அதே பகுதியில் விவேகானந்தன் என்பவர் ஊர் காவல் படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார்.
தற்போது ஊரடங்கு காரணத்தினால் விவேகானந்தன் தனது வீட்டில் இருக்கும் தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரிடமிருந்த 50 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்வதோடு, போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனரான நஜ்மல் ஹோடா அதிரடி நடவடிக்கையாக விவேகானந்தன் மீது வழக்கு பதிவு செய்ததோடு, அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.