வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம் என தமிழக அரசு பிற மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிமாநிலம் செல்பவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் அல்லது தனிநபர் செலுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய விரும்பினால் பணி செய்யலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: ” அரசின் அறிவிப்புகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் விரும்பினால் இங்கு தங்கி பணிபுரியலாம்.
மேலும் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல தொழிலாளர்கள் விரும்பினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். படிப்படியாக ஒரு வாரத்திற்குள் வெளி மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். அதன்படி தற்போது, வெளிமாநில தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு செலவை அந்தந்த மாநிலங்கள் செலுத்தலாம் என கூறியுள்ளார்.
அதேபோல, வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகளவு இருந்தால் அவர்கள் தனி ரயிலில் சொந்த மாநிலம் அனுப்பிவைக்கப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளது. அவர்களுக்கு தொற்று உறுதியாகவில்லை என்றாலும் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.