வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு பாஸ்ட் ட்ராக் மூலம் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஒருவர் சுங்க சாவடி ஊழியர்களிடம் பிரச்சனை செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் என்ற பகுதியை சேர்ந்த கமல் ரகுமான் என்பவர் ஒரு வாரமாக தனது காரை எடுக்காமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் இருந்து பணம் எடுக்கப் பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்குள்ள சுங்க சாவடி ஊழியர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளனர்.
பின்னர் அவர்களிடம் சண்டை போட்ட போது ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அவர் கூறியபோது டோல்கேட்டில் நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதை தவிர்க்க பாஸ்ட்டாக் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் இதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு எதற்கு பாஸ்டேக் கட்டணம். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால் அலட்சியத்துடன் பதில் கூறுகிறார்கள்.
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போதும் எனது வாகனம் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பணத்தை திருப்பி கேட்டால் பதில் அளிக்க மறுக்கின்றனர். இந்த முறைகேடு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.