தாய் மற்றும் மகள் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கீத கிருஷ்ணன்- கல்பனா. இவர்களுக்கு குணாலிஸ்ரீ(14) மற்றும் மானசா(4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏழு தினங்களாக கீத கிருஷ்ணனின் வீடு பூட்டியிருந்ததுடன் அங்கிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அறையில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் கல்பனாவின் உடல் இருந்துள்ளது.
அதேபோல குணாலிஸ்ரீயும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வீட்டிலிருந்து இரண்டு கடிதங்களை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் கோதண்டபாணி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தங்களை மோசடி செய்து விட்டதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என்றும் கீத கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
ஆனால் எங்கு தேடியும் கிருஷ்ணனை காணவில்லை என்பதால் மனைவி மற்றும் தன்னுடைய மகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டாரா? அல்லது கிருஷ்ணனுக்கு என்ன ஆனது? தான் தப்பிப்பதற்காக கடிதம் எழுதி திசை திருப்புகிறாரா? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கீத கிருஷ்ணன் செல்போனை எடுத்துக்கொண்டு இரண்டாவது மகளையும் தூக்கிக்கொண்டு தலைமறைவானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவருடைய IMEI நம்பரை வைத்து தேடி வந்த காவல்துறையினர் இன்று காலை கோயம்பேடு அருகே கீத கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.