18 முதல் 24 மாதங்களுக்குள் அனைத்து கட்டிட பணிகளும் முடிக்கப்பட்டு குடிசை மக்கள் கட்டிடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று துணை முதல்வர் o.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாறும் என்று விதி எண் 110-ன் கீழ் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி சென்னையில் பல்வேறு குடிசைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கே இருக்கக்கூடிய மக்களை அப்பார்ட்மெண்ட்க்கு மாற்றக்கூடிய பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக சென்னை கேசவபிள்ளை பூங்கா அருகே உள்ள இடத்தில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட அப்பார்ட்ஸ்மெண்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திறந்து வைத்து கட்டிடத்திற்குள் பார்வையிட்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
ஏற்கனவே தமிழக அரசு கூறியிருந்தபடி தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் குடிசைப் பகுதியில் இருக்கும் அனைவரும் அப்பார்ட்மெண்ட்களுக்கான பட்டா வழங்கப்பட்டு விரைவில் அவர்கள் குடியமர்த்தபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே பல பகுதிகளில் அபார்ட்மென்ட்கள் கட்டப்பட்டு ஏராளமானோர் குடி வைக்கப்பட்டதாகவும் தற்போது கட்டப்பட்ட அப்பார்ட்மெண்ட் புதிய குடிசைப்பகுதி மக்களுக்கு ஒதுக்கீடு செய்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 18 முதல் 24 மாதங்களுக்குள் அனைத்து கட்டிட பணிகளும் முடிவடைந்து குடிசையில் இருக்கக்கூடிய அனைவரும் கட்டிடங்களுக்கு நிச்சயமாக குடி அமர்த்தப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளார்.