குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் நேற்று இரவு கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ப்ரமுக் சுவாமி மகாராஜா சதாப்தி விழாவில் கலந்து கொண்டு சிலர் பேருந்தில் திரும்பி கொண்டு இருந்தனர். இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 9 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பேருந்தில் இருந்த 28 பேர் பலத்த காயங்கள் அடைந்த நிலையில், 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.