கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்தில் வேகமாக பரவும் நோயை கட்டுப்படுத்துவதற்காக நகராட்சி, வருவாய் மற்றும் சுகாதாரத் துறை போன்ற அனைத்து துறையினரும் ஒன்று சேர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து திண்டிவனத்தில் உள்ள கடைகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் முக கவசம் அணிந்து பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா என சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்த சமயத்தில் திண்டிவனம் பாரதி வீதியில் இருக்கும் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசத்தை அணியாமலும் பொது மக்கள் கூட்டமாக இருந்தனர். இதனால் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பிசிங் அந்த இரண்டு தனியார் மருத்துவமனைகளையும் மூடி சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி இரண்டு மருத்துவமனைகளையும் மூடி நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்து விட்டனர்.