தனியார் விடுதியில் உள்ள ஒரு அறையிலிருந்து மூன்று குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸ்சிலாந்தில் திமரு பகுதியில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் உள்ள அறையில் இருந்து மூன்று குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளனர். மேலும் ஒரு பெண் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அதிலும் சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தைகக்கு 10 வயதும் மற்ற இருவரும் இரட்டையர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து திமரு பகுதியில் உள்ள குயின்ஸ் சாலையில் இருக்கும் ஹோட்டலில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று சடலங்களையும் மீட்டு காயங்களுடன் இருந்த அந்த குழந்தைகளின் தாயையும் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அழுகுரல் கேட்டதாகவும் அதனையடுத்து கதவு மூடப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த குடும்பம் அண்மையில் தான் தென்னாப்பிரிக்காவிலிருந்து நியூசிலாந்திற்கு வந்துள்ளனர். அதிலும் அவர்களுக்கு என்று நியூசிலாந்தில் சொல்லிக் கொள்ளும் வகையில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை என்று போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அந்த குழந்தைகளின் தாயார் பிள்ளைகளை சேர்க்க சிறந்த பள்ளிகள் குறித்து சமூக ஊடகங்களில் ஆலோசனை கேட்டு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட பிறகே உண்மையான தகவல்கள் வெளிவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி 5 வயது சிறுவன் மரணமடைந்தது தான் திமரு பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய கோர சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.