- பீன்ஸை உப்பு சேர்த்து வேகவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த டபீள் பீன்ஸை பஜ்ஜி மாவு, போண்டா மாவு மற்றும் பக்கோடா மாவில் கலந்து பக்கோடாவாக செய்யலாம். மாறுதலான சுவையுடன் நன்றாக இருக்கும்.
- பலாப்பழ விதையை நீளவாக்கில் சிறிதாக நறுக்கி, காய்ந்த இறால், பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், புளி சேர்த்து வேகவைத்து கூட்டு தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து சேர்க்க சுவையாக இருக்கும்.
- பூண்டுடன் கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் பூண்டு நீண்ட நாட்கள் வரை புழுக்காது.
- மோர் மிளகாயை வறுக்கும் போது கொஞ்சம் வெந்தயத்தை ஊறவைத்து மோருடன் கலந்து மிளகாயை வறுத்தால் காரம் குறைந்து ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.
- ஒரு கப் உளுத்தம்பருப்புக்கு 2½ கப் பச்சரிசியை கருகாமல் வறுத்து ஊறவைத்து பிறகு அரைக்க வேண்டும். இட்லி பஞ்சு போல இருக்கும்.
- அல்வா மிக்சுடன் ஜவ்வரிசியை கொஞ்சம் ஊறவைத்து அரைத்து கலந்தால் அல்வா நிறையவும், கண்ணாடி போல் மின்னவும் செய்யும்.
- ரவா அல்லது சேமியா கிச்சடி எதுவாக இருந்தாலும் சரி கிளறி இறக்கும் முன் மிகப் பொடியாக அரிந்த தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி 1 நிமிடம் மூடி பரிமாற கிச்சடி நிறம் மாறாமலும் தக்காளி சற்றே மெத்தென்றும் இருக்கும்.
- தோசைக்கு ஊறவைக்கும் போது அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றுடன் அவல், சிறிதளவு கொள்ளு, ஒரு கைப்பிடி சோயா இவற்றையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து தோசை வார்த்தால் சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
- மைதா பர்பி, தேங்காய் பர்பி போன்றவற்றை செய்யும் போது பதம் வந்து தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடும் முன் டூட்டி ஃப்ரூட்டியைத் தூவினால் ரத்ன கல் பதித்தது போல் கண்ணைக் கவரும்.
- தேனீர் செய்யும் பொழுது இஞ்சி அல்லது சுக்கு அதனுடன் 2 ஏலக்காய், 2 கிராம்பு, 1 பட்டை, தேவையான அளவு பனை வெல்லம் இவைகளை போட்டு செய்தால் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு சர்க்கரையின் அளவு மெல்ல மெல்ல குறையும்.
- தேவையான அளவு சப்போட்டா பழங்களை எடுத்து தோல் விதை நீக்கி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், தேவையான அளவு வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்து வடிகட்டி ஜூஸாக கொடுக்க வித்தியாசமான சுவையில் இருக்கும்.
- குழிப்பணியாரம் செய்ய வெந்தயம், அரிசி, உளுந்து இவற்றுடன் ஜவ்வரிசியையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து பணியாரம் செய்தால் மிருதுவாக இருக்கும்.
- குளிர்ந்த நீரில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து அதில் உலர்ந்த கறிகாய்களை ஒரு மணி நேரம் போட்டு வைத்தால் கறிகாய்கள் புதிது போல் ஆகி விடும்.
- புட்டு ஆவியிலிருந்து இறக்கி சூட்டிலேயே உதிர்த்து, வெல்லத்தூள் அல்லது சர்க்கரை, ஏலத்தூள் போட்டு, காய்ச்சிய ஆறிய பாலை தெளித்து, காய்ச்சிய நெய் 2 டீஸ்பூன் விட்டுக் கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி வேறு பாத்திரத்திற்கு மாற்றினால் வறண்டு போகாமல் இருக்கும்.
- ரவா இட்லி, சேமியா இட்லி மிக்ஸ் வாங்கி மீந்து விட்டால் அதனுடன் கொஞ்சம் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து போண்டா பதத்தில் உருட்டி பொரித்து எடுக்க மொறுமொறு போண்டா ரெடி.
Categories