இந்தியாவில் தேர்தலின் போது அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் வைத்தே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்தியை கையாளுகின்றனர். இந்த தேர்தல் வாக்குறுதிகளில் எப்படியாவது ஒரு இலவச திட்டத்தையும் சேர்த்து விடுகிறார்கள். இந்த இலவச திட்டங்கள் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் சில வசதி படைத்தவர்களுக்கும் சென்றடைகிறது என்பது நிதர்சனமான உண்மை. அதுமட்டுமின்றி இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறிகளாக மாற்றுகிறது என்ற கருத்தும் தற்போது பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்பிறகு விரிவான விசாரணைக்காக 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஒரு முக்கியமான அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது அரசியல் கட்சிகள் பொதுமக்களிடம் தேர்தலின் போது நிதி ஆதாரம் திரட்டப்படுவது எப்படி என்ற தகவலை விளக்க வேண்டும். இது குறித்து பரிந்துரைக்கப்பட்ட கடிதத்தில் போதிய விவரங்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக நிதிநிலைமை மீது விரும்பத்தகாத எண்ணங்கள் ஏற்படுகிறது. எனவே நிதி ஆதாரத்தை திரட்டுவது தொடர்பான விவரத்தை வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.