சோதனை கருவிகள் தரத்தை உறுதி செய்யாமல் ரூ.600க்கு கொள்முதல் செய்தது ஏன்? என தமிழக அரசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளை ரூ.600 கொடுத்து வாங்கியதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. நேற்று திமுக தலைவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள் என்பது மலிவான அரசியல் அல்ல; ஜனநாயக உரிமை என கூறியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ரேபிட் டெஸ்ட் கிட் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், டெல்லி உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய விலை உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஏற்பட இருந்த இழப்பீடு ரூ.17 கோடியே 75 லட்சம். சோதனை கருவியின் விலையை ஐசிஎம்ஆர் முடிவு செய்வதா? நீதிமன்றம் முடிவு செய்வதா? இதுதான் மோடி ஆட்சியின் இலக்கணமா? என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஐசிஎம்ஆர் அங்கீகரிக்காத விநியோகஸ்தரிடம் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசு வாங்கியது ஏன்? என்றும், தகுதியான நிறுவனத்திடம் இருந்து சோதனை கருவிகளை வாங்காத மத்திய, மாநில அரசுகள் மக்களை எப்படி காப்பாற்றும் என குற்றம் சாட்டியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் கொரோனா நோயை எதிர்த்து போராடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வாங்கப்பட்டுள்ள ரேபிட் கிட் கருவிகள் கொள்முதல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.