தமிழகத்தில் உள்ள காப்பகங்களில் கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமை செயலர் வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சுமார் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்த செய்தியை அறிந்த உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபொழுது, ஏற்கனவே பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் பல்வேறு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் எப்படி இந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது? என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். காப்பாளருக்கு ஏற்பட்ட தொற்றால், குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அரசு காப்பகங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா பரவலை தடுக்க ஈடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.