தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் தொற்று தீவிரமடைந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது..
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிகம் எடுக்கப்பட்ட முக்கிய மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. ஏனென்றால் கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலி மதுரையில் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி மாவட்ட நிர்வாகம் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் வைத்திருந்தது.
இருப்பினும் ஆரம்பகால ஊரடங்கு நாட்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் விதிமுறையை மீறிய நடந்ததை பல்வேறு இடங்களில் காண முடிந்தது.. இந்நிலையில் சமூக விதிகளை பின்பற்றாத நேரத்தில் குறைந்த கொரோனா எண்ணிக்கை தற்போது கடும் கட்டுப்பாடு உள்ள நேரத்தில் உயர்ந்துள்ளது என்பது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
இதற்கு ஆதாரமாக கடந்த ஒரு மாதத்தில் குறிப்பாக கடந்த 10 நாட்களில் நூற்றுக்கணக்காக அதிகரித்து 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.. கடந்த 4 நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 தொட்டுள்ளது.. கடந்த மே மாதத்திற்கு முன் ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.. அப்போது தினமும் பரிசோதனை முடிவில் 20 மற்றும் 30 என கொரோனா பாசிட்டிவ் வந்தது.. தற்போது 2,000 வரை தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால் தினமும் பாதிப்பு 100, 200, 300 என அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அது போக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இ பாஸ் மூலமாகவும் இ பாஸ் இல்லாமலும் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் சென்னை மற்றும் பிற மாவட்டம், பிற மாநிலங்களில் இருந்து மதுரைக்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இவர்களால் தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சம் மதுரை மக்கள் மனதில் எழுந்துள்ளது.. மொத்தத்தில் மதுரையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவது மாவட்டம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.