சேலம் அருகே ஆம்ணி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ1,00,00,000 மதிப்பிலான தங்க வைர நகைகள் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் BMG ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் கௌவுதம் என்பவர் சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள தலைமை கிளையில் இருந்து சுமார் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பேக்கில் வைத்துக் கொண்டு ஆம்னி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள வைகுண்டம் சுங்கச்சாவடி அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ஊழியர் பேக்கை பேருந்தில் வைத்துவிட்டு சாப்பிட சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது நகைகள் இருந்த பேக் கொள்ளையடிக்கப்பட உடனடியாக சுதாரித்த ஊழியர் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பிறகு பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது சந்தேகிக்கும் வகையில் ஒருவன் பேருந்தில் நடமாடிய காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர் ஊழியர் கெளதம் மற்றும் மர்மநபரை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேருந்தில் நகைகள் கொண்டு செல்லப்படுவதை முன்பே நன்கு அறிந்தவர்கள் பின்தொடர்ந்து சென்று கைவரிசை காட்டி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் வைகுண்டம் சுங்க சாவடி அருகே கோவை நகரைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவரின் மகன் சொகுசுப் பேருந்தில் கொண்டு சென்ற ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.