இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழ, நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது பள்ளிக்கரணை சுபஸ்ரீ வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகின்றது. இந்நிலையில் விதிகளை மீறி பேனர் வைப்பது தொடர்பான வழக்கு ட்ராபிக் ராமசாமி தொடுத்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விதிகளை மீறி பேனர்கள் வைக்க மாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே? என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளது. இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது?. குற்றம் நடக்க அனுமதிக்கிறீர்கள்.பின்னர் குற்றவாளிகள் பின்னால் ஓடுகிறீர்கள். பேனர் வைத்தால்தான் நிகழ்ச்சிக்கு வருவார்களா?. என்று சரமாரி கேள்வியெழுப்பியது. மாநில அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும் நீதிமன்றம் அதை செயல்படுத்த தகுதி இல்லை என்று நினைக்கிறார்களா? என்று தமிழக அரசை விளாசியது. நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு பின்பற்றும் என்ற நம்பிக்கை குறைந்து விட்டது இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 2.15 மணிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.