கொரோனவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை கணக்கெடுத்து பட்டியலை அனுப்புமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
வெளியூரில் உள்ள மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு வர இ-பாஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வந்து விடுதியில் தங்க வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கு மேலும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.
திருவல்லிக்கேணியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவர் சில தினங்களுக்கு முன்பாக காய்ச்சலால் பாதிக்கப்ட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழகத்தில் முழுவதும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதை கணக்கெடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.