கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர்., ஆய்வகங்கள் உள்ளன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த தொடர்பாக மே 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விவரம்:
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, கொரோனா வைரசை கண்டறிந்து, அந்த வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது முக்கியம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 138 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 452 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் தற்போது ரேபிட் டெஸ்டிங் கிட் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், பிசிஆர் மூலமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலமாக 452 பேருக்கு பரிசோதனை செய்யும்பொழுது அதில் 19 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள 41 ஆய்வகங்கள் தவிர தமிழகத்தில் அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பி.சி.ஆர் ஆய்வகங்கள் நிறைய உள்ளன.
அதனை முழுமையாக பயன்படுத்தினால் 30 நாட்களில் 14 லட்சம் பேருக்கு சோதனையை மேற்கொள்ள முடியும். அதனால் ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ள ஆய்வகங்கள் தவிர, பிற கல்விநிறுவனங்களில் எத்தனை ஆய்வகங்கள் இருக்கிறது என்பதை தமிழக அளவிலும், இந்திய அளவில் எத்தனை ஆய்வகங்கள் இருக்கிறது என்பதை அறிக்கையாக அளிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஆய்வகங்களில் பரிசோதனைக்கு அனுமதி அளிக்க உத்தரவிடப்பட்டு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு:
இந்த வழக்கை நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியா முழுவதும் இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கிய ஆய்வகங்களை தவிர்த்து அணுசக்தித் துறை, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு பாதுகாப்பு ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிசிஆர் ஆய்வகங்களில் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து மே12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும் படி, மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.