குடும்ப அட்டைகள் இல்லாத நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழிலாளர்கள், தினக்கூலி, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் ரேஷன் அட்டை பலரிடம் இல்லை.
எனவே அவர்களின் ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் உணவு தானியங்கள் விநியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு வழக்கறிஞர் அருள் அரசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி மூலம் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் எத்தனை பேர்?, அவர்களை அரசு கணக்கெடுத்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளதா? என்பது போன்ற கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும் இது தொடர்பான விவரங்களை மே20ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.