Categories
தேசிய செய்திகள்

நீதி எவ்வளவு விரைவாக வழங்கப்படுகிறது?

நம் நாட்டில் உள்ள விரைவு நீதிமன்றங்களில் நீதி எவ்வளவு விரைவாக வழங்கப்படுகிறது என பார்க்கலாம்.

விரைவு நீதிமன்றங்கள் 2000ஆவது ஆண்டில் தொடங்கப்பட்டது. கீழைமை நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. விரைவான நீதியை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றங்களில் பல வழக்குகள் தற்போது தேங்கி நிற்கின்றன.வழக்குகளில் நீதி வழங்க பத்து ஆண்டுகள் வரை ஆகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிஜம். சமீபத்தில் ‘திஷா’ வழக்கில் ஒரு விரைவு நீதிமன்றத்தை அமைப்பதன் பின்னணியில் நாட்டில் பரவலான விவாதம் நடைபெற்றது.

அந்த வகையில், நாட்டில் விரைவான நீதியை வழங்கும் முதல் இரண்டு மாநிலங்களில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதே நேரத்தில் பீகார் மற்றும் தெலுங்கானா ஆகியவை மோசமான நிலையில் உள்ளன.இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு உத்தரப் பிரதேசம். இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 6 லட்சம் வழக்குகள் விரைவு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உத்தரப் பிரதேசத்தில் உள்ளன.

தேசிய குற்றவியல் புள்ளிவிவர பணியத்தின் அறிக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில், “கிட்டத்தட்ட 12 சதவீத வழக்குகளில், மாநில விரைவு நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்க 10 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.விரைவு நீதிமன்றங்கள் என்ற பெயரில் வழக்குகளை ஜவ்வாக இழுக்கும் மாநிலமாக பிகார் திகழுகிறது. இங்கு மூன்றில் ஒரு பங்கு வழக்குகளை தீர்க்க, பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஊழியர் பற்றாக்குறை மிக முக்கிய காரணம்.

நாட்டில் தற்போது 581 விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான நீதிமன்றங்கள் ஊழியர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக நாடு முழுவதும் 1023 விரைவு நீதிமன்றங்கள் நிர்பயா நிதியில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |