Categories
மாநில செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1ம் தேதி நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தற்போது ஜூன் 15ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜூன் 15ம் தேதியும் தேர்வுகள் நடத்தக்கூடாது என்றும், பள்ளிகளில் வகுப்புகளை நடத்திய பின்பு தான் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும், குறிப்பாக கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வுகளை நடத்த முடியாது எனவே தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று எஸ்எப்ஐ என்ற மாணவர் பேரவையின் நிர்வாகி மாரியப்பன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ஜூலை மாதம் நடைபெற உள்ள சிபிஎஸ்சி தேர்வுகளோடு இந்த தேர்வையும் நடத்தலாம் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகளும் இன்னும் வைக்கப்படவில்லை. இந்த நிலையில் அவசர அவசரமாக 10ம் வகுப்பு தேர்வுகள் மட்டும் நடைபெறுகிறது.

எனவே இதனை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஏற்கனவே நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மையங்களை அமைக்கக்கூடாது என்ற மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதிகளிலும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்படி தேர்வுகளை நடத்த போகிறீர்கள்?, வெளியில் இருந்து மாணவர்கள் எவ்வாறு வருவர்? போன்ற கேள்விகளை முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை வழக்கறிஞர், தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அன்று இந்த வழக்கையும் மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உரிய பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Categories

Tech |