அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் அதிமுகவில் இருக்கக்கூடிய 65 சட்டமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடிய சூழலில் மீதமுள்ள 61 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.
அதேபோல 75 மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள 69 மாவட்டச் செயலாளர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் மீதம் இருக்கக்கூடிய 6 மாவட்ட செயலாளர்களை நிரப்புவது தொடர்பான ஆலோசனைகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெற இருக்கிறது. அதேபோல 17ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்ட தொடரில் அதிமுக சார்பில் என்னென்ன பேச வேண்டும் ? என்பது தொடர்பாகவும் அவர்களுக்கு ஆலோசனையானது வழங்கப்பட இருக்கிறது.
அதிமுக ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு என தனித்தனியாக சட்டமன்றத்திற்கு வரக்கூடிய நிலையில் ஆளும் கட்சிக்கு எதிராகவும், ஓபிஎஸ் தரப்புக்கு எதிராகவும் எப்படி எல்லாம் பேச வேண்டும் ? என்பது குறித்து அறிவுரைகள் ஆனது வழங்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் பொன்விழா ஆண்டானது 17ஆம் தேதி, 20ஆம் தேதி, 26 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மூன்று தேதிகளிலும் அதிமுக பொன்விழா ஆண்டாக சிறப்பான பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த பொதுக்கூட்டங்களில் என்ன பேச வேண்டும் ? என்பது குறித்தும் அவர்களுக்கு ஆலோசனையானது வழங்கப்படுகிறது. எனவே தற்போது நடைபெறக்கூடிய ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம், கே.சி வீரமணி, ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி உதயகுமார், செம்மலை, செல்லூர் ராஜு மற்றும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அமைப்பு செயலாளர் பொன்னையன் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள்.