கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இந்த விழாவை கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், மாவட்ட நிர்வாகம் கலங்கரை விளக்கத் திட்டம், பொது நூலகத்துறை ஆகியோர் இணைந்து நடத்தினர். இந்த விழாவில் பெருந்தலைவர் காமராஜரின் பேரனும், சென்னை காமராஜ் ஐஏஎஸ் அகாடமியின் கௌரவ இயக்குனருமான காமராஜ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேசினார்.
அவர் பேசியதாவது, இந்திய குடிமை பணி மற்றும் போட்டி தேர்வுகளை மாணவ- மாணவிகள் எவ்வாறு அணுகுவது என்ற முறையை தெரிந்து கொள்ள வேண்டும். இதில் 11 போட்டி தேர்வுகள் இருக்கும் பட்சத்தில் குடிமைப்பணி தேர்வு முதன்மையானது ஆகும். இந்த தேர்வு கடினமானது கிடையாது. இந்த தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும், தேர்வு எப்படி எழுத வேண்டும் என்ற முறையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே முதன்முதலாக தேர்வு எழுதுபவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் மற்றும் தேர்வு எழுதுபவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
முயற்சி செய்து விரும்பி படித்தால் கண்டிப்பாக வெற்றியை அடையலாம். இந்த தேர்வில் முதுலை படித்தவர்கள் மட்டும்தான் வெற்றி பெற முடியும் என்பதெல்லாம் கிடையாது. இத்தேர்வில் இளநிலை படித்தவர்கள் கூட கலந்து கொள்ளலாம். கரூர் மாவட்டத்தில் கலங்கரை விளக்க திட்ட பயிற்சியின் மூலம் 48 மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதியின் முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்.
இந்நிலையில் சுய மதிப்பீடு, சுற்றுச்சூழல் அறிதல், இலக்கு நிர்ணயித்து பயணம், இலக்கினை அடைந்து சிறப்பாக செயல்படுதல், பிறருக்கு வழிகாட்டுதல் போன்றவைகள் வெற்றியின் படிகளாக கருதப்படும் நிலையில், படிக்கும்போது நடப்பு செய்தித்தாள், பொது அறிவு, பூகோள அமைப்புகள், அரசியல் சாசன அமைப்புகள் போன்றவற்றை தெரிந்து வைத்துக் கொண்டு படித்தால் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறலாம் என்று கூறினார். மேலும் தேர்வில் வெற்றி பெற்ற 48 மாணவர்களும் அதிகாரிகளாக வரவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.