கொரோனாவால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏன் இத்தனை பாதிப்புகள் என்று உலகம் முழுவதுமே கேள்விகள் எழுப்பப்படுகிறது. அதற்கு விடை தேடும் தொகுப்பு இது
தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக சீனாவில் இருந்து ஏராளமான மருத்துவக் கருவிகளும், பாதுகாப்பு கவசங்கள் விமானங்கள் மூலமாக இறங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்காக நியூ யார்க் நிர்வாகம் சீனாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இரு மாதங்களுக்கு முன்பு இதுபோன்று விமானங்கள் மூலமாகத் தான் கொரோனாவும் அமெரிக்காவிற்குள் வந்திருக்கிறது.கொரோனா பரிசோதனை நடத்தபடாத கடந்த ஜனவரி மாதத்திலும் இதே விமான நிலையத்தில் சீனாவில் இருந்து ஏராளமான பயணிகள் விமானங்கள் வந்து இறங்கி இருக்கின்றன.
இவற்றின் மூலமாக பல்லாயிரக்கணக்கானோர் சீனாவில் இருந்து நியூயார்க் நகருக்கு வந்து இருக்கிறார்கள். இவர்களால்தான் கொரோனா வைரஸ் நியூயார்க் நகருக்கு வந்திருக்கலாம் என்று அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.இதை உறுதி செய்வதற்காக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த பலரிடம் பேட்டி எடுத்து நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி 20 தேதி கண்டறியப்பட்டது.
ஜனவரி 31-ம் தேதி சீனாவிலிருந்து வரும் விமானங்களுக்கும், சீனாவுக்குச் சென்று வந்தவர்களுக்கும் அமெரிக்காவுக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்னதாகவே நியூயார்க், சன் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் 17 முக்கிய நகரங்களுக்கு சுமார் 1300 விமானங்கள் சீனாவில் இருந்து நேரடியாக வந்திருக்கின்றன. சுமார் 4 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு, வந்து பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று இருக்கிறார்கள்.
இவர்களில் 25 விழுக்காடு நபர்கள் மட்டுமே அமெரிக்கர்கள். ஜனவரி மாதத்தில் அமெரிக்க விமானங்கள் சீனாவுக்கு செல்வது நிறுத்தப்பட்ட பிறகு, சீன விமானங்களே அதிக அளவு அமெரிக்காவுக்கு வந்திருக்கின்றன. பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, போதிய சோதனைகள் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவுக்குள் வந்திருக்கலாம். இவைபோன்ற அமெரிக்காவில் கட்டுப்பாடற்ற போக்குவரத்து நடைமுறைகளும், தொடக்க கால அலட்சியமும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கானோர் பரவக் காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.