புதுச்சேரி எல்லையில் இ-பாஸ் இருந்தாலும் வாகனங்கள் அனுமதி இல்லை என போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் உட்பட வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல புதுச்சேரி அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
மருத்துவம் பார்ப்பதை தவிர விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று அறிவித்தார். இந்த நிலையில் புதுச்சேரி எல்லையில் சோதனைகள் கடுமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்குள் இ-பாஸ் இருந்தாலும் வாகனங்கள் அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் – புதுச்சேரி எல்லையான மதகடிப்பட்டு பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் அணிவகுத்து இருப்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. அதுமட்டுமின்றி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை நிலவரப்படி 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 246 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.