எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எச்.டி.சி நிறுவனம் தனது டிசயர் 12 மற்றும் டிசயர் 12+ என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு இந்த நிறுவனம் எந்த வித ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவில்லை. இந்நிலையில் தற்போது இந்தியாவில் இரண்டு வகைகளில் மைபட்டி (Mybuddy) என்ற வசதியுடன் கூடிய ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த போனின் வசதியானது தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த இரண்டு வகைபோன்களும் சபயர் ப்ளூ (Sapphire Blue) என்ற ஒரே வண்ணத்தில் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 22 தேதி முதல் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன் 3D OPVD கண்ணாடி திரை கொண்டதோடு பின்புறத்தில் ஹைப்பர் ஆப்டிகல் வடிவமைப்புகளை கொண்டுள்ளது. மேலும் இரண்டு நானோ சிம் வசதி, ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளம் மற்றும் 6.22-இன்ச் HD+ திரை (720×1520 பிக்சல்கள்), HD+ IPS திரை, வாட்டர்-ட்ராப் நாட்ச் அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 12 MP அளவிலான முதன்மை கேமரா, 8 MP அளவிலான இரண்டாம் நிலை கேமரா மற்றும் 5 MP அளவில் டெப்த் சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முதல் வகையான 3GB RAM + 32GB சேமிப்பு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாயாகவும், 4GB RAM + 128GB சேமிப்பு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 12,999 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.