நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியின் சர்வதேச கூட்டமைப்பு ஹப்பிள், விண்வெளி தொலைநோக்கியால் எடுத்த ஒரு புகைப்படத்தை கடந்த 2020-ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியிட்டிருந்தது. அதில், விண்வெளியின் அரிதான ஐன்ஸ்டீன் வளையம் என்ற நிகழ்வு தெரிந்திருக்கிறது.
இதற்கு, மோல்டன் ரிங் என்று பெயரிட்டுள்ளார்கள். அதாவது, விண்வெளி மண்டலத்திலிருந்து தொலைதூரத்தில் வரும் ஒளியானது, நடுவில் இருக்கும் ஈர்ப்பு விசையினால் பார்ப்பவர்களின் கண்களுக்கு வட்டவடிவிலான வளையம் போல தெரியும். இதனை, முதன் முதலாக கடந்த 1912 ஆம் வருடத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்திருக்கிறார்.
இதனால் தான், ‘ஐன்ஸ்டீன் வளையம்’ என்று கூறப்படுகிறது. மேலும், ஹப்பிள் வெளியிட்டிருந்த புகைப்படத்தை வைத்து வானியலாளர்கள், 9.4 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் விண்மீன் திரள் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தில் பயிலும், நிகோலாஸ் சுல்செனோயர் என்ற மாணவர் தெரிவித்துள்ளதாவது, புதிதாக நட்சத்திரங்கள் உருவாக காரணமாக இருக்கும் மூலக்கூறு வாயு தான் சிவப்பு மாற்றத்தை தெளிவாக கணக்கிட உதவியாக இருந்தது. இது தான் வெகு தூரத்தில் இருக்கும் விண்மீன் திரளை நம்மால் பார்க்க முடிகிறது என்ற நம்பிக்கையை தருகிறது என்று கூறியிருக்கிறார்.