ஊரடங்கு பின்பற்றப்படும் நிலையில் ஒரே நேரத்தில் வாகன இ-பாஸ்கள் வாங்க மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறபிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது, அவசர தேவைக்காக செல்வோர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மருத்துவம், திருமணம், இறப்பு ஆகிய 3 காரணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில், அத்தியாவசிய தேவைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் வெளியே செல்ல இ-பாஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முதலாக இ-பாஸ் சேவையை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் தேவை உள்ளவர்கள் வாட்ஸ்அப் எண் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் ஒரே இடத்தில் வாகனம் செல்ல அனுமதி கேட்டு ஒரே இடத்தில கூடுவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாகனம் வெளியே செல்ல அனுமதிகோரி 100க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர்.
இதனால் சிறுது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. சமூக விலகல் கொஞ்சம் கூட பின்பட்டப்படவில்லை. இதையடுத்து, இ-பாஸ் வழங்கும் அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 52 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.