டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி (உபரி) வர்த்தகம் 2019ஆம் ஆண்டில் மேலும் அதிகரிப்பை எட்டிள்ளது.
இதன்படி, 2019இல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோ அளவுக்கு இறக்குமதியும் அதைவிட அதிகமாக 384.4 பில்லியன் யூரோ அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. 2018ஆம் ஆண்டை விடவும் இது 11 சதவீத அதிகரிப்பாகும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் தங்களை மிகவும் மோசமாக நடத்தி வருவதாகவும், அந்நாட்டுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை குறித்து இவ்வாரத்தில் மீண்டும் கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்துடனும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிவிட முயற்சித்து வரும் ட்ரம்ப், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அந்நாட்டு பொருட்களுக்கான வரியை உயர்த்தப்போவதாகவும் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.