கட்டியணைக்கும் தொழிலை செய்யும் அமெரிக்க பெண், தன் தொழில் குறித்து விளக்கமளித்துள்ளார்.
இந்திய நாட்டைத் தவிர பிற நாடுகளில் ஒருவரை சந்தித்தவுடன் கட்டி அணைப்பது தான் வழக்கம். ஆனால் கொரோனா, இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லும் இந்திய கலாச்சாரத்தை, பிற நாடுகளையும் பின்பற்ற வைத்துவிட்டது. எனவே வெளிநாட்டவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை கூட கட்டியணைப்பதில்லை.
இதனால் அவர்களுக்கு மன நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டிப்பிடிப்பதையே தொழிலாக சில நாடுகள் தொடங்கிவிட்டன. அதாவது “மருத்துவ முத்தம்” என்பது பிரபல நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு பிரபலமாகிவிட்டது. இதேபோன்று தான் “மருத்துவமுறை கட்டியணைத்தல்” தொழிலும் தொடங்கப்பட்டிருக்கிறது.
இது நம்பும் வகையில் இல்லை என்றாலும், கடந்த 7 வருடங்களாக இந்த தொழிலில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த கீலி ஸூப் என்ற பெண் கூறுகையில், தற்போது கொரோனாவால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கு அரவணைப்பு தேவைப்படுகிறது என்று கூறுகிறார். இவர் சுமார் 100 டாலர்கள் ஒரு மணிநேரத்திற்கு சம்பளமாக பெறுகிறார்.
இது இந்திய மதிப்பில் சுமார் 7,300 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கூறுகையில், “என் பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் ஆத்மார்த்தமாக செய்கிறேன். தவறான எண்ணத்தோடு யாரையும் நெருங்குவதில்லை. புத்தகங்களை வாசிக்குமாறும், தலையணை சண்டை போடுங்கள் என்றும் சிலர் வித்தியாசமாக என்னிடம் கேட்பதுண்டு. எனினும் என் கட்டுப்பாடுகளில் வரும் விஷயங்களை மட்டுமே செய்கிறேன்.
இதன் மூலம் அவர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியேறி நிம்மதி அடைவதற்கு உதவியாக இருக்கிறேன்” என்று கூறுகிறார். இதே தொழிலில் வேறு பெண்கள் சிலரும் இருக்கிறார்கள். அவர்கள், “கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் மன அழுத்த பிரச்சனைகளிலிருந்து மீண்டவர்களுக்கு தான் அதன் அருமை புரியும்” என்று விளக்கமளித்துள்ளார்கள்.