Categories
உலக செய்திகள்

விண்வெளி பயணத்திற்கு பின் எலும்பு பாதிப்புகள்… ஆய்வில் வெளியான தகவல்…!!!

விண்வெளி பயணம் மேற்கொண்டு விட்டு திரும்பும் வீரர்களின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்த விண்வெளி வீரர்கள் 17 பேர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள், சுமார் 7 மாதங்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார்கள். பூமிக்கு வந்த பின் சுமார் ஓர் ஆண்டாக அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டது.

அதன்படி விண்வெளி வீரர்களின் கால்களில் இருக்கும் டிபியா என்னும் எலும்பில் 2.1%  தேய்மானம் உள்ளது. மேலும் அவர்களது எலும்புகளில் உறுதித் தன்மையும் 1.3% குறைவாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் ஓராண்டில் விண்வெளி வீரர்கள் 8 பேரின் எலும்பு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.

ஆனால், 9 விண்வெளி வீரர்களின் எலும்புகள் நிரந்தரமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர். அதாவது பூமியில் இருக்கும் போது சுமார் 20 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய எலும்பு பாதிப்பானது, விண்வெளியில் இருக்கும்போது ஆறு மாதங்களில் ஏற்பட்டு விடுகிறது என்று ஆராய்ச்சியாளரான லேய்க் கேபல் என்பவர் கூறி இருக்கிறார்.

எனினும் அதில் சிலருக்கு அந்த பாதிப்பு சரியாகிவிடுகிறது. ஒரு சில நபர்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாவது, மனிதர்கள் பூமியில் இருக்கும் போது நம் எடையை எலும்புகள் தாங்குகின்றன.

ஆனால், விண்வெளியில் எடையில்லாத சூழ்நிலையில் வீரர்கள் இருக்கிறார்கள். அப்போது, இவ்வாறு பாதிப்புகள் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், உடற்பயிற்சிகளின் மூலமாக இதனை குணப்படுத்தி விட முடியும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |