மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் எம். சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனுவினை அளித்துள்ளார். அந்த மனுவில் எம். சரண்ராஜ் கடந்த 2019ஆம் ஆண்டு ஜாபர்கான்பேட்டை பகுதியில் இருக்கும் ராகவ ரெட்டி காலனியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்நிலையில் அந்த இடத்திற்கு குமரன் நகர் சப்-இன்ஸ்பெக்டர் எம். சுகன்யா என்பவர் இரண்டு போலீஸ்காரர்களுடன் சென்று அந்த இடத்தில் கிரிக்கெட் விளையாட கூடாது என்று சரண்ராஜின் கன்னத்தில் அறைந்துள்ளார். அதன்பின் அந்த இரு போலீஸ்காரர்கள் லத்தியால் தாக்கியதோடு, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பல்வேறு இடங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
மேலும் அவரிடமிருந்து 1, 500 ரூபாயை வாங்கிக்கொண்டு சரண்ராஜை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து சரண்ராஜுக்கு போலீஸ்காரர்கள் தன்னிடம் வாங்கிய தொகையை நீதிமன்றத்தில் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரண்ராஜ் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் 25 ஆயிரம் ரூபாயை சரண்ராஜுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், அந்த தொகையை சப் இன்ஸ்பெக்டரிடம் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.