Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை… இஸ்லாமியர்கள் பிளாஸ்மா தானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்துவருகின்றனர்.

கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் வருகின்றது. இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநாடுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது..

அதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் பலர் தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பல இஸ்லாமியர்களும் தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்து  வருகின்றனர். தற்போதுவரை பார்த்தோம் என்றால், டெல்லியில் மட்டும் நரிலா மையத்தில் 190 பேரும், சுல்தான்புரி மையத்தில் இருந்து 51 பேரும், மங்கோல் பூரி மையத்தில் இருந்து 42 பேரும் என மொத்தம் 283 பேர் சிகிச்சைக்காக பிளாஸ்மாவை தானம் அளித்துள்ளனர்.

பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்த நபர்களின் உடல்களில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும். அவர்களின் ரத்தத்தில் உள்ள பிளஸ்மாவை எடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்துவார்கள். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களில் நோய் எதிர்ப்புச் சக்தி விரைவில் உருவாகும்.

இந்த பிளாஸ்மா முறையில் டெல்லியில் நடைபெற்ற சிகிச்சை வெற்றியடைந்துள்ளது. பெரும்பாலும் தங்கள் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானமாக அளிப்பதற்கு ஏதுவாக யாரும் முன்வர மாட்டார்கள். இருப்பினும் தற்போது டெல்லி  மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலரும் முன்வந்து தானம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |