மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த கணவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது
சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அதிலிருந்து புகைப்படம் நீக்கப்பட்டு வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதனால் அவர் தான் போலீசில் புகார் அளிக்கப் போவதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபர்கள் தாங்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். அதோடு மனைவியை மேலும் ஆபாசமாக படம் எடுத்து அவர்களுக்கு அனுப்பாவிட்டால் இன்னும் மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்க காவல்துறை அதிகாரிகள் பேஸ்புக்கின் பக்கத்தை ஆய்வு செய்யத் தொடங்கினர். அதில் மயிலாடுதுறையை சேர்ந்த சிவா என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் என்பதும் பர்னிச்சர் கடை ஒன்றில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவரே பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை எடுத்து தவறாக சித்தரித்து தனது மற்றொரு போலி பேஸ்புக் கணக்கில் பதிவு செய்தது கண்டறியப்பட்டது. அதுமட்டுமன்றி போட்டோவிற்கு சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு அவர்களை மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சிவா. இதைத்தவிர வேறு யாரிடமாவது இதேபோன்று செய்துள்ளாரா என்பது குறித்து தெரிந்துகொள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.